1

ஆதலால் மற்றவர்களை நியாயந்தீர்க்கிற மனுஷனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ மற்றவர்களை எந்த விஷயத்தில் நியாயந்தீர்க்கிறாயோ, அந்த விஷயத்தில் உன்னையே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்; மற்றவர்களை நியாயந்தீர்க்கிற நீயும் அவைகளையே செய்கிறாயே.

2

இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்கு விரோதமாகத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்குமென்று அறிந்திருக்கிறோம்.

3

இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களை நியாயந்தீர்த்தும், அவைகளையே செய்கிற மனுஷனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ?

4

அல்லது தேவனுடைய தயவு உன்னை மனந்திரும்புதலுக்கு நடத்துகிறதென்று அறியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடியசாந்தம் ஆகிய இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?

5

உன் கடினமான மனந்திரும்பாத இருதயத்திற்குத் தக்கதாக, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினை நாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.

6

தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாகப் பலன் அளிப்பார்.

7

நற்கிரியைகளிலே பொறுமையாய்த் தொடர்ந்து நின்று, மகிமையையும் கனத்தையும் அழிவில்லாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார்.

8

சண்டையிடுகிறவர்களாயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநீதிக்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரமும் கோபமும் வரும்.

9

தீமைசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் நெருக்கமும் வரும், முதலில் யூதனுக்கும் பின்பு கிரேக்கனுக்கும் வரும்.

10

நன்மைசெய்கிற எவனுக்கும் மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும், முதலில் யூதனுக்கும் பின்பு கிரேக்கனுக்கும் உண்டாகும்.

11

தேவனிடத்தில் பட்சபாதமில்லை.

12

நியாயப்பிரமாணம் இல்லாதவர்களாய்ப் பாவஞ்செய்கிறவர்கள் யாவரும் நியாயப்பிரமாணம் இல்லாமலே அழிந்துபோவார்கள்; நியாயப்பிரமாணத்திற்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறவர்கள் யாவரும் நியாயப்பிரமாணத்தினாலேயே நியாயந்தீர்க்கப்படுவார்கள்.

13

நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.

14

நியாயப்பிரமாணம் இல்லாத புறஜாதிகள் சுபாவமாய்ப் பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணம் இல்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.

15

அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று குற்றப்படுத்துகிறதினாலும் அல்லது நியாயப்படுத்துகிறதினாலும், நியாயப்பிரமாணத்தின் கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று அவர்கள் காண்பிக்கிறார்கள்.

16

என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு மனுஷருடைய இரகசியங்களை நியாயந்தீர்க்கும் நாளிலே இது விளங்கும்.

17

இதோ, நீ யூதனென்று பேர்பெற்று, நியாயப்பிரமாணத்தின்மேல் நம்பிக்கையாயிருந்து, தேவனைக்குறித்து மேன்மைபாராட்டுகிறாய்.

18

நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து, விசேஷித்தவைகளை வகைபிரித்தறியவும்;

19

குருடர்களுக்கு வழிகாட்டியாகவும், அந்தகாரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும்,

20

மூடர்களுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு ஆசிரியனாகவும், நியாயப்பிரமாணத்திலுள்ள அறிவின் மற்றும் சத்தியத்தின் வடிவை உடையவனாகவும் உன்னை நீயே நம்புகிறாயே.

21

இப்படி மற்றவர்களுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதிக்கலாமா? களவு செய்யக்கூடாது என்று பிரசங்கிக்கிற நீ களவு செய்யலாமா?

22

விபசாரஞ் செய்யக்கூடாது என்று சொல்லுகிற நீ விபசாரஞ் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா?

23

நியாயப்பிரமாணத்தைக் குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறுகிறதினால் தேவனைக் கனவீனப்படுத்தலாமா?

24

எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் உங்கள் மூலமாய்ப் புறஜாதிகளுக்குள்ளே தூஷிக்கப்படுகிறதே.

25

நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதாயிருக்கும்; நீ நியாயப்பிரமாணத்தை மீறுகிறவனானால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாய்ப் போகும்.

26

விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்தின் நீதிமுறைகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனமாக எண்ணப்படும் அல்லவா?

27

சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவன், வேத எழுத்தையும் விருத்தசேதனத்தையும் உடையவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னை நியாயந்தீர்ப்பான் அல்லவா?

28

புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.

29

உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி அல்ல, ஆவியின்படி இருதயத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்கு வரும் புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாகும்.